4 மார்ச், 2015

காட்டுக் கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைக்கப் பட்டு இன்று தமிழகமெங்கும் தழைத்தோங்கி வளர்ந்திருக்கும் காட்டுக் கருவை பற்றிய செய்திகள் நிறைந்த கவிதை .


தெற்கத்திச் சீமையை தெம்பாக்க 
மரம்  வளர்ப்புத் திட்டம் தந்த 
மகராசரே !
“கல்விக்கண் திறந்தவரு 
கண்மாய்குலம் கண்டவரு” னு 
கட்சிக்காரங்க பாடுற பாட்டைக் 
காதுகொடுத்துக் கேட்டிருக்கேன் 
காமராசரே!
நீ தந்த திட்டத்தால் 
நாங்க படும் பாட்டையும் 
கோவிச்சுக்காம கொஞ்சம் கேளு!

வருணபகவானுக்கு வழிதெரியாத 
எங்கஊருக் காடு கழனியில் 
வேலை  எதுவும் இல்லாம 
வெட்டியா இருந்த எஞ்சனங்களுக்கு
வெட்டிவேலை தந்த 
கெட்டிக்காரரே!
ஆமா.....
நீ தந்த கருவேலவிதைகள் 
உன்புகழச் சொல்லிச்சொல்லி
உன்புகழச் சொல்லிச்சொல்லி
‘ஒய்யாரமா ’ வளந்திருக்கு 
அதுனாலே நீ
கர்மவீரர் மட்டுமல்ல 
கருவேலரும் தான். !   

வெறகு வெட்டி மூட்டம் போட்டு 
வருமானத்தை பெருக்கச் சொல்லி 
நீதந்த வெதைவித்துக்களை 
அறுவடைசெய்ய
எஞ்சனங்களும்
வெட்றாங்க... வெட்றாங்க
வெட்டிக்கிட்டே இருக்காங்க
அருவாளும் அழுகுது 
இடைவேளை கேட்டு!

அண்ணா தந்த அரிசி கூட 
அள்ள  அள்ளக் குறையுது 
ஆனா-
நீ தந்த அட்சய மரம் ...
அடடா...!

உன்னால நான் படிச்ச பாடம் 
“வெட்ட வெட்ட 
வேகமாத் தழையிறது 
வாழைமரம் மட்டுமில்ல 
நீ தந்த 
வேலமரமும் தான்!”

நீதந்த அதிசய மரங்கள் 
என்னைக்காவது ஏமாந்ததனமா 
வழிதவறிப் பெய்யுற 
கொஞ்ச நஞ்ச மழைத்தண்ணியவும்
அடையாளம் தெரியாத அளவுக்கு 
அப்பவே சாப்பிட்டுருதே..! 

ஒருகாலத்துல –
முத்துமுத்தா நெல்லு வெளஞ்ச
எங்க சேதுசீமையோட 
சொத்துக்களைக் காப்பாத்த- 
வறட்சியத் தாங்குற 
புரட்சியச் செஞ்ச கர்மவீரரே! – நீ 
என்னைக்குமே எங்களுக்குக் 
‘கர்மா வீரர்’ தான்!

அரசியல் வளர்ச்சிக்கு
நீதந்த ‘ K Plan ’  ஐ 
ஆட்சியில மாறிமாறி 
அமருறவங்க நினைவுல 
இருக்கோ இல்லையோ 
நீ தந்த இந்த ‘ K Plan ‘ ஐ 
மாத்தி- எங்க 
மண்ணைக் காக்குற திட்டம் 
மருந்துக்குக்கூட இல்லை!
காந்திக்குக் கதர் மாதிரி 
ஒருவேளை – உன் 
நெனவுக்கு அடையாளம்னு 
நெனக்கிறாங்களோ என்னமோ ...!

இன்பச்சுற்றுலான்னு    
கேட்டிருக்கேன் – ஆனா 
என்னைக்காவது 
இராமநாதபுரத்துப் பக்கம்
யாரும் வந்ததுண்டா?
எது எப்படியோ –
ஆனை கட்டிப் போரடிச்ச 
பாண்டியனார் தேசத்துக்கு 
இப்போ 
‘ தண்ணியில்லாக்காடு’னு 
பேருவாங்கித் தந்த 
பெருமையெல்லாம் 
உங்களைத்தான் சேரும்...
இத்தனைக்கும் உத்தமரே – இது 
நீ பொறந்த மண்ணு இல்லையா...!

இதுக்குமேல உன் புகழச் சொன்னா
‘ இவன் ஏதோ 
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ‘ னு 
சங்கத்தைக் கூட்டி சிலபேரு 
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட...

- பெயர் சொல்ல விரும்பாத மண்ணின் மைந்தரான ஒரு பேராசிரியர். #







VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ ' வீடியோ எடிட்டர் . ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெரு...